தனி ஒருவனாக போராடிய டேவிட் வார்னர்..!! கடைசி வரை சொதப்பிய டெல்லி வீரர்கள்..!!



Lucknow Supergiants won the league match between Delhi-Lucknow teams by 50 runs.

டெல்லி-லக்னோ அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அபார வெற்றி பெற்றது.

கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய 16 வது சீசனில், முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நேற்று நடந்த 2 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச தீர்மானித்தது. இதனை தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது.

அந்த அணிக்கு கே.எல்.ராகுல்-கைல் மேயர்ஸ் தொடக்கம் அளித்தனர். கே.எல்.ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மேயர்ஸ் உடன் தீபக் ஹூடா இணைந்தார். இதன் பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா 17 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 12 ரன்னிலும் வீழ்ந்தனர். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கவலைப்படாமல் அதிரடியில் மிரட்டிய மேயர்ஸ் 38 பந்தில் 73 ரன்கள் குவித்த நிலையில்  ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து குருணால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். பூரன் 21 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஆயுஷ் பதோனி 18 (7) ரன்களில் வெளியேறினார். 20 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் குவித்தது. குர்ணால் பாண்டியா 15 (13) ரன்களுடனும், கவுதம் 6 (1) ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.  டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது மற்றும் சேட்டன் சகாரியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை அடுத்து 194 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா-டேவிட் வார்னர் ஜோடி தொடக்கம் அளித்தது. பிரித்வி ஷா 12 ரன்களில் போல்ட் ஆகி ஏமாற்றம் அளிக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மிட்சல் மார்ஷ் டக்-அவுட்டிலும் சர்பாஸ் கான் 4 ரன்னிலும் மார்க் வுட் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் அதிரடி காட்டிய ரூசோ 30 (20) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து ரோவ்மேன் பவல் 1 ரன்னிலும், அமன் ஹக்கிம் கான் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் போராடிய கேப்டன் டேவிட் வார்னர் 56 (48) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற டெல்லி அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.