மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராக்கெட் வேக ரன் குவிப்பில் ராஜஸ்தான்..!! 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சாதனை.
கொல்கத்தா அணிக்கு எதிரான 56 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியை பதிவு செய்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 56 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 56 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் -ரஹ்மானுல்லா ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. இந்த ஜோடியில் ஜேசன் ராய் 10, ரஹ்மானுல்லா 18 ரன்களுடன் விரைவில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசினார்.
மறுமுனையில் நிதிஷ் ராணா 22, ஆன்ட்ரே ரஸல் 10, ரிங்கு சிங் 16 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 1, சுனில் நரைன் 6 ரன்களுடன் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். வெங்கடேஷ் அய்யர் 57 ரன்களுடன் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது.
ராஜஸ்தான் அணியின் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற டுவைன் பிராவோவின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். இதனையடுத்து 149 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர்-ஜெய்ஸ்வால் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது.
பட்டாசாய் வெடித்த ஜெய்ஸ்வால் பேட்டில் பட்ட பந்துகள் ராக்கெட் வேகத்தில் எகிறி பறந்தன. சூராவளியாய் சுழன்றடித்த ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் விளாசி ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக அரைசம் வீசிய வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். அவர் அரைசதம் விளாசிய போது ராஜஸ்தான் அணி 2.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 98 ரன்கள் குவித்து அசத்தினார். இவருடன் இணைந்து மறுமுனையில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 48 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 13.1 ஓவர்களில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 3 வது இடத்திற்கு முன்னேறியது.