காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
இந்திய அணி வீரர்களின் பணிச்சுமை மீது அதிக கவனம் தேவை..!! ஐ.பி.எல் அணிகளுக்கு ரோஹித் சர்மா எச்சரிக்கை..!!
ஐ.பி.எல் போட்டிகளின் போது இந்திய அணி வீரர்கள் தங்களது பணிச்சுமையை கவனமாக கையாள வேண்டும் என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
16 வது ஐ.பி.எல் டி-20 போட்டிகள் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்ப்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் முன்னாள் சாம்ப்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.
ஐ.பி.எல் டி-20 போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அதில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பணி சுமையில் கவனம் கொள்ளுமாறு ஐ.பி.எல் அணிகளின் நிர்வாகத்தினருக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் காயம் அடைவது கவலைக்குரிய விஷயமாகும். வீரர்களின் பணிச்சுமை சிறப்பாக கையாளப்பட்டு வருகிறது. அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களுக்கு போதிய அளவுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.
இருந்த போதிலும் திடீரென ஏற்படும் காயங்களை கட்டுப்படுத்த இயலாது. ஐ.பி.எல் போட்டிகள் முடிவடைந்த பின்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை மர்றும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி உள்ளிட்ட முக்கியமான போட்டி தொடர்களில் பங்கேற்க உள்ளதால் ஐ.பி.எல் போட்டிகளின் போது வீரர்கள் தங்களது பணிச்சுமையை கவனமாக கையாள வேண்டியது அவசியமானதாகும்.
ஐ.பி.எல் அணிகளில் விளையாடும் இந்திய வீரர்களின் உடல் தகுதி விவகாரத்தில் எந்த மாதிரியான வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது குறித்து ஐ.பி.எல் அணிகளின் நிர்வாகத்தினருக்கு, இந்திய அணி தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுப்பது ஐ.பி.எல் அணிகளின் கையில் தான் உள்ளது.
இந்திய அணி வீரர்களுக்கு தங்களது உடலை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். ஐ.பி.எல் தொடரின் போது அதிக பணிச்சுமை ஏற்படுவதாக வீரர்கள் உணர்ந்தால் அணி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து ஒரு சில போட்டிகளில் இருந்து விலகிக் கொள்ளலாம். இருந்த போதிலும் இதனை சாத்தியப்படுத்த முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.