சச்சினுக்கு இரண்டுமுறை தவறான தீர்ப்பு வழங்கினேன்! ஆதங்கத்துடன் உண்மையை ஒப்புக்கொண்ட பிரபல நடுவர்!



Steve Bucknor talk about his judgement


சர்வதேச கிரிக்கெட்டில் தலைச்சிறந்த நடுவர்களில் ஒருவராக திகழ்ந்த ஸ்டீவ் பக்னர். ஆனால் இவர் கடைசி கட்டத்தில் சில தவறான தீர்ப்புகளை வழங்கி சர்ச்சையில் சிக்கினார். ஸ்டீவ் பக்னர் இதுவரை 128 டெஸ்ட் மற்றும் 181 ஒரு நாள் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி இருக்கிறார். 

ஸ்டீவ் பக்னர் 2009-ம் ஆண்டு நடுவர் பணியில் இருந்து ஒதுங்கினார். இவர் இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இரண்டு முறை தவறான தீர்ப்பு அளித்ததை தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சச்சின் டெண்டுல்கருக்கு இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் நான் தவறுதலாக அவுட் கொடுத்திருக்கிறேன். எந்த நடுவரும் வேண்டுமென்றே தவறு செய்வது கிடையாது.

sachin

நானும் அதேபோல தான் 2003-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கில்லெஸ்பியின் பந்து வீச்சில் டெண்டுல்கருக்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்தேன். பிறகு பந்து ஸ்டம்புக்கு மேலாக செல்வதும், நான் தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டோம் என்பதையும் உணர்ந்தேன். 

இதே போல் 2005-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அப்துல் ரஷாக் வீசிய பந்தில் சச்சின் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனதாக விரலை உயர்த்தினேன். ஆனால்  ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெளிவாக தெரிய வந்தது. பொதுவாக கொல்கத்தா ஈடன்கார்டனில் இந்தியா பேட்டிங் செய்யும் போது  இந்திய ரசிகர்களின் கரவொலியில் எதுவும் சரியாக கேட்காது. அதனால் தான் நானும் தவறுதலான தீர்ப்புகளை வழங்கியுளேன்.

sachin

நான் செய்த இதுபோன்ற தவறுகளால் மிகவும் வேதனைக்கு உள்ளானேன். நானும் மனிதன் தானே. தவறு செய்வது மனிதனின் இயல்பு. தவறுகள் செய்வதும், தவறுகளை ஏற்றுக்கொள்வதும் மனிதன் வாழ்வின் ஒரு பகுதி தான். இப்போதுள்ள டி.ஆர்.எஸ். உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் நடுவரின் நம்பிக்கையை பாதிக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் துல்லியமான தீர்ப்புகளை வழங்குவதில் அது உதவிகரமாக இருப்பதை அறிவேன். 

நான் ஒரு பேட்ஸ்மேனுக்கு அவுட் வழங்கி அது தவறான தீர்ப்பு என்று உணர்ந்தால் அன்றைய இரவில் சரியாக தூக்கம் வராது. அந்த நினைப்பால் தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆகும். ஆனால் தற்போது அந்த தொந்தரவுகள் இருக்காது என ஸ்டீவ் பக்னர் தெரிவித்துள்ளார்.