இந்தியா vs முகமது நபி; நியூசிலாந்து vs பிராத்வெயிட்; நேற்றைய ஆட்டங்களின் திக் நிமிடங்கள்!



The fearing moments of worldcup matches

2019 ஐசிசி உலக கோப்பை தொடர் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் கடைசி நிமிடம் நிமிடம் வரை பரபரப்பு நீடித்தது.

முதல் ஆட்டத்தில் பேட்டிங் செய்த இந்திய அணி வழக்கத்திற்கு மாறாக சொதப்பலான பேட்டிங்கால் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய அணியின் விராட் கோலி மற்றும் கேதர் ஜாதவ் மட்டும் அரைசதம் அடித்தனர்.

wc2019

பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே மிகவும் பொறுமையுடன் இந்திய பந்துவீச்சாளர்களை கையாண்டனர். ஒவ்வொரு விக்கெட்டையும் பெறுவதற்கு இந்திய பந்து வீச்சாளர்கள் மிகவும் திணறினார்கள். 29 ஆவது ஓவரில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் ஆட்டம் இந்தியாவின் பக்கம் வந்தது.

ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபி மட்டும் கடைசிவரை நின்று அரை சதம் அடித்து இந்திய அணிக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்தார். ஒரு வழியாக கடைசி ஓவரில் முகமது சமி ஹாட்ரிக் விக்கெட் எடுக்க இந்திய அணி திகில் வெற்றி பெற்றது.

wc2019

அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் 292 ரன்கள் இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து அணியை கடைசி நிமிடம் வரை நடுநடுங்க வைத்தார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ப்ராத்வெயிட். 45வது ஓவரிலேயே 9 விக்கெட் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை 49 ஆவது ஓவர் வரை எடுத்துச் சென்றார் ப்ராத்வெயிட்.

wc2019

கடைசி மூன்று ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. மேட் ஹென்றி வீசிய 48 வது ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசி 25 ரன்கள் எடுத்தார் ப்ராத்வெயிட். அடுத்த இரண்டு ஓவர்களில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் 49 ஆவது ஓவரில் முதலில் 2 ரன்களை எடுத்து கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முயன்றார். ஆனால் எல்லைக்கோட்டில் நின்ற போல்ட் சிறப்பாக கேட்ச் பிடிக்க நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.


இதுவரை இந்த உலக கோப்பை தொடரில் நடைபெற்றுள்ள ஆட்டங்களில் இந்த இரண்டு ஆட்டங்களைப் போல் எந்த ஆட்டமும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. ஒரே நாளில் இரண்டு பரபரப்பான ஆட்டங்களை கண்டு ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.