மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரிவுகளை சரிகட்டி எழுச்சி கண்ட மும்பை இந்தியன்ஸ்..!! இம்முறை கோப்பையை வென்று சாதிக்குமா..?!!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் ப்ளே-ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்த மும்பை அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 56 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற 57 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன்-ரோஹித் சர்மா ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. சிறப்பான தொடக்கம் அளித்து அதிரடியாக விளையாடிய மும்பை அணிக்கு ரஷித்கான் தனது பந்துவீச்சில் இரட்டை செக் வைத்து அசத்தினார். அவரது பந்துவீச்சில் ரோஹித் 29, இஷான் கிஷன் 31 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒரு முனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மிஸ்டர் 360 டிகிரி சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் நாலா புறமும் பந்துகளை பறக்கவிட்டார். இதற்கிடையே நேஹல் வதேரா 15, விஷ்ணு வினோத் 30, டிம் டேவிட் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இருந்த போதிலும் கடைசிவரை அதிரடியாக வெடித்த சூர்யகுமார் யாதவ் கடைசி பந்தில் சிக்ஸருடன் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரஷித்கான் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இலக்கை விரட்டுவதில் கில்லாடிகளான குஜராத் அணியினர் 219 ரன்கள் இலக்கை விரட்டி தொடக்கத்தில் சஹா 2, ஹர்திக் பாண்டியா 4, சுப்மன் கில் 6 விக்கெட்டுகளை விரைவாக பறிகொடுத்தனர். பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர்-டேவிட் மில்லர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. விஜய் சங்கர் 29, டேவிட் மில்லர் 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து வந்த ரஷித்கான் இம்முறை சரவெடியாக வெடிக்க குஜராத் அணியின் ரன்ரேட் மீண்டு எழுந்தது. மறுமுனையில் ராகுல் திவாட்டியா 14 ரன்களில் ஆட்டமிழக்க, சிக்ஸர் மழை பொழிந்த ரஷித்கான் அரைசதம் விளாசி மிரட்டினார். தனியொருவனாக போராடிய ரஷித்கான் 32 பந்துகளை சந்தித்து 10 சிக்ஸர், 4 பவுண்டரி உட்பட 79 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை அணி தரப்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டும், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்த மும்பை அணி ப்ளே-ஆப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த மும்பை தனது கடைசி 5 போட்டிகளில் 4 ஐ வென்று வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளதால் அந்த அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.