நட்ட நடு இரவில் போடப்பட்ட ரோடு!,. வாகனங்களை அப்புறப்படுத்தாமல் சுற்றி வந்த ரோடு ரோலர்: காண்டிராக்டர் அட்டூழியம்..!



a-road-roller-who-roamed-around-without-removing-the-ro

நட்டநடு இரவில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதை அறப்போர் இயக்கம் என்ற அரசு சாரா அமைப்பு ஒன்று ஒரு வீடியோ பதிவின் மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

நள்ளிரவில், பழைய சாலையை அகற்றாமல் பழுதாகியுள்ள அந்த சாலையின் மீது புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சாட்சியாக சாலை அமைக்க தாருடன் கலந்த சிப்ஸ் (6 எம்.எம் அளவிற்கு உடைக்கப்பட்ட கருங்கல் துகள்கள்) பழைய சாலையின் மீது கொட்டப்பட்டுள்ளது. சாலையை ஒழுங்கு படுத்தும் விதமாக, இருளில் விளக்கு வெளிச்சத்துடன் ரோலர் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, சாலை அமைக்கும் பணி நடந்த பகுதியில் ஹட்ஸன் நிறுவன கார் ஒன்று சாலையோரமாக நின்று கொண்டு இருந்துள்ளது. சாலை அமைக்கும் பணிக்கு அந்த கார் இடையூறாக இருந்ததால், அதனை எப்படி அப்புறப்படுத்துவது என்று புரியாமல் பணியாளர்கள் விழி பிதுங்கி நின்றுள்ளனர். இதனையடுத்து அந்த காரை சுற்றி சாலை அமைக்கும் பணியை தொடர்ந்துள்ளது தெள்ளத்தெளிவாக அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இந்த சாலை அமைக்கும் பணியை கண்காணிக்க, அங்கே எந்த அரசு அதிகாரியும் இல்லாத நிலையில், இந்த பணிக்கு நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் திருட்டுதனமாக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து அறப்போர் இயக்கம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சாலை அமைக்கும் பணி நடந்தது குறித்த வீடியோவை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது: -

இரவு நேரத்தில் திருடர்கள் போல நுழைந்து பழைய சாலையை அகற்றாமல் புதிய சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர். கண்காணிக்க அதிகாரிகளும் கிடையாது மக்கள் பிரதிநிதிகளும் கிடையாது. மழை வெள்ளம் வீட்டு உள்ளே வந்த பிறகு மோட்டாருடன் போஸ் கொடுக்க வருவார்கள். #Arappor  @chennaicorp @GSBediIAS @CMOTamilnadu

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.