விபத்தை தவிர்க்க திருப்பியபோது ஏற்பட்ட விபத்து: 5 ஆம் வகுப்பு மாணவன் உடல் நசுங்கி பலி..!



Accident occurred while swerving to avoid an accident

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலா செம்மண்காடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பிரபாகரன் (10). இவர் ஆயில்பட்டி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக சிறுவன் பிரபாகரன், செம்மண்காடு பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள நிழற்குடையில் காத்திருந்தார்.

அந்த வழியாக நாமக்கல் நோக்கி தனியார் கல்லூரி பேருந்து ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை திருப்பினார்.  திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிழற்குடையின் மீது அதிவேகமாக மோதியது. இதில் பேருந்து சக்கரம் ஏறியதில் மாணவர் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் மதுமிதா, கிருத்திகா ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆயில்பட்டி காவல்துறையினர், விபத்தில் பலியான மாணவர் பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் அன்பழகனிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் செம்மண்காடு கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.