லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர்,.. பொறிவைத்து பிடித்த போலீசார்..!



anti-corruption-police-arrested-panchayat-secretary-at

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். ஒப்பந்ததாரர் ஆன இவருக்கு புத்தாநத்தம் ஊராட்சியில் பைப் லைன் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்த பணிகளுக்காக ஊராட்சி நிர்வாகம் ரூ 4 லட்சம் பணம் கொடுக்க வேண்டியிருந்தது.

இதனை வழங்கக்கோரி முகமது இஸ்மாயில் புத்தாநத்தம் ஊராட்சி செயலாளரான வெங்கட்ராமனை அணுகியுள்ளார். அப்போது வெங்கட்ராமன் பணத்தை விடுவிக்க தனக்கு ரூ 6000 லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் முகமது இஸ்மாயில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். 

அங்கு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் பெயரில் ரசாயனம் தடவிய 16 ஆயிரம் பணத்தை நேற்று மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து, ஊராட்சி செயலாளர் வெங்கட்ராமனிடம் கொடுத்துள்ளார். அப்போது அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக வெங்கட்ராமனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்த லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்