டிராஃபிக் போலீசுக்கு அடி உதை: கஞ்சா போதை ஆசாமிகள் அட்டூழியம்.! பரபரப்பான 4 முனை சந்திப்பு..!



Atrocity of ganja addicts kicking traffic police

காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறையில் 2 ஆம் நிலை காவலராகப் பணிபுரிந்து வருபவர் சேகர். இவர் நேற்று முன்தினம் மாலை பெரிய காஞ்சிபுரம் பகுதியில் ஆதி காமாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள செங்கழுநீரோடை வீதி சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது  எதிர்திசையில் அதிவேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி, அதிலிருந்த இளைஞர்களிடம் பொறுமையாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அந்த ஆட்டோவில் கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் போக்குவரத்து காவலர் சேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென சேகரை கற்கள் மற்றும் கட்டையால் தாக்கியதுடன் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

எதிர்பாராத தாக்குதலில், காயமடைந்து நிலை குலைந்த போக்குவரத்து காவலர் சேகரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இருட்டு நேரமாக இருந்ததால் காவலரை தாக்கிய இளைஞர்களிம் முகம் தெளிவாக தெரியவில்லை. இதனையடுத்து அவர்களின் உடல் பாவனைகளை அடிப்படையாக கொண்டு போதை இளைஞர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில், புல்லட் தீபக் என்கிற தீபக் (28), முகமது சாகீர் (24) ஆகிய இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் போக்குவரத்து காவலரை தாக்கியதை அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்றாவது இளைஞர் எவ்வித தாக்குதல்களிலும் ஈடுபடாதது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.