இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது? சோபியாவின் பின்னணி என்ன?



background of sopia in thoothikudi

தூத்துக்குடி விமான நிலையத்தில் 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை முன்பாக துணிச்சலுடன் குரல் எழுப்பும் அளவுக்கு இவருக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்று பலரும் தேடி வருகின்றனர். 

கனடாவில் M.Sc கணிதம் முடித்து விட்டு, தற்போது அங்குள்ள மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த பெண் தான் சோபியா. 

who is sofia

தூத்துக்குடி மாவட்டம் மூன்றாம் மைல் பகுதியைச் சேர்ந்த சாமி - மனோகரி தம்பதியின் மகள் சோபியா, மகன் கிங்ஸ்டன். தந்தை சாமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் மனோகரி, தலைமை செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சகோதரர் கிங்ஸ்டன், தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

படிப்பின் மீது அதிகம் ஆர்வம் கொண்ட சோபியா ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் எம்எஸ்சி இயற்பியல் படித்துள்ளார். அதன்பின் கனடாவில் எம்எஸ்சி கணிதம் படித்தார். தற்போது அவர் கனடாவில் முனைவர் பட்டம் பெற, பிஎச்டி படித்துக் கொண்டுள்ளார். 

who is sofia

கனடாவில் இருந்து விடுமுறைக்காக நாடு திரும்பிய இவர் முதலில் சென்னையில் சில திருமண நிகழ்வுகளுக்கு சென்றுள்ளார். அதன்பின், அங்கிருந்து நேரடியாக தூத்துக்குடி வந்துள்ளார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசையை பார்த்த போது தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, சோபியா கனடாவில் தங்கியிருந்த போதிலும், மக்களின் போராட்டத்திற்காக சமூக வலைதளங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் குறித்தும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்தும் இணைய ஊடகம் ஒன்றில் தாம் அளித்த பேட்டியின் தொகுப்பை, டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

who is sofia

சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டம், ஒகி புயலால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், சமூக ஆர்வலர்கள் வளர்மதி, திருமுருகன் காந்தி ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு கருத்துகளை தமது டிவிட்டர் பக்கத்தில் சோபியா பதிவிட்டுள்ளார். தலித் அரசியல், இடதுசாரி அரசியல் என பல்வேறு அரசியல் கருத்துக்களையும் சோபியா பதிவிட்டுள்ளார்.

கனடாவிலிருந்த படியே தமிழக மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்துவந்த சோபியா, விடுமுறையைச் சொந்த ஊரில் கழிப்பதற்காக கனடாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் வந்திறங்கிய சோபியா, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையை விமானத்தில் பார்த்ததும், "பாசிச பாஜக ஆட்சி ஒழிக" என முழக்கம் எழுப்பியுள்ளார். இதனால், அவர் கைது செய்யப்பட்டார்.