வாயடைக்கவைக்கும் வாழை இலை விலை.! என்ன காரணம் தெரியுமா.?
தற்போது வைகாசி வளர்பிறை முகூர்த்த நாட்கள் தொடங்கியுள்ளதால் தொடர்ச்சியாக 15 நாட்கள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி வாழை இலை மற்றும் வாழைத்தார்கள் தேவை பொதுமக்களுக்கு அதிகரித்துள்ளது.
பழங்காலத்தில் இருந்தே நமது பாரம்பரியத்தோடு நெருங்கிய தொடர்புடையது வாழை இலை. விருந்து, விழாக்கள், திருமணம், சுக-துக்க நிகழ்வுகளில் வாழை இலை மரியாதையின் வெளிப்பாடாகவும், சுகாதாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது.
டெல்டா மாவட்டங்களில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழையும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நுனி இலை ரூ.2-க்கும், ஏடு இலை ரூ.1.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வைகாசி மாத முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதால் இலைகளுக்கு மவுசு ஏற்பட்டு வாழை இலை விலை உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் நுனி இலை ரூ.5-க்கும், ஏடு இலை ரூ.4-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை உயர்வு காரணமாக பல ஹோட்டல்களில் பிளாஸ்டிக் தட்டு, பேப்பர் இலை போன்றவற்றின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.