குடியால் இன்னும் எத்தனை பொதுமக்கள் பலியாக வேண்டும்? - பாஜக பிரமுகர் கொலை வழக்கில் சீறும் அண்ணாமலை..!



BJP State President Annamalai Angry about Supporter Family Killed in Palladam 

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், மாதப்பூர் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் மோகன்ராஜ், செந்தில் குமார், புஷ்பவதி, ரத்தினம்பாள் ஆகியோர் குடியிருப்பு பகுதியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

அந்த ட்விட்டர் பதிவில், "குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட, பல்லடம் சட்டமன்றம் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து கிளை பாஜக தலைவர் சகோதரர் மோகன்ராஜ் அவர்கள் சமூகவிரோதிகளால் குடும்பத்துடன் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். 

மோகன் ராஜ் அவரது தம்பி, அம்மா, சித்தி என நான்கு பேரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். சகோதரர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

bjp

தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும்? 

தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், அதற்குப் பொறுப்பான காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே.

குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைகள் கட்டப்பட்டு இருக்கும் காவல்துறையை ஆளுங்கட்சி பிடியிலிருந்து விடுவித்து அவர்கள் பணி செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.