மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் பரிதாபமாய் பறிபோன 13 வயது சிறுவனின் உயிர்!! மகனை இழந்து கதறும் கூலித்தொழிலாளி!!
அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் இருந்து தாக்கிய மின்சாரத்தால் 13 வயது பள்ளிச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனது ஒரே மகனை இழந்த கூலித்தொழிலாளி, மகனின் உடலை கண்டு கதறி அழுத சம்பவம் பார்ப்போர் மனதை மிகவும் வேதனை அடையச் செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மேல பொன்னன்விடுதி கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மின்சாரக் கம்பிகள் சேதமடைந்து அறுந்து கிடந்துள்ளன. இதனை கண்ட அந்த கிராமத்தின் மக்கள் துண்டித்த மின்கம்பியை சரிசெய்யும்படி மழையூர் துணை மின் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதனை பெரிதாக கண்டுகொள்ளாத மின்சார வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த மின் கம்பியை மூன்று நாட்களாகியும் சரிசெய்யாமல் விட்டுள்ளனர்.
அதே கிராமத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருபவர் அய்யாக்கண்ணு. இவர் தனது மனைவி கனகாம்பாள், மகள் அனுஷ்யா மற்றும் 13 வயது மகன் மணிகண்டன் உடன் வசித்து வருகிறார். மகன் மணிகண்டன் அதே ஊரில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
மின்கம்பி அறுந்து விழுந்துள்ளதை அறிந்திராத மணிகண்டன் நேற்று காலை 8 மணி அளவில் அந்த வழியாக சென்றுள்ளான். மின்கம்பி அறுந்து கிடப்பதை பார்க்காமல் அதன்மேல் காலை வைத்த மணிகண்டனை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி எறியப்பட்ட மணிகண்டன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
மணிகண்டனின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
மின் ஊழியர்களின் அலட்சியப் போக்கால் உயிரிழந்த மணிகண்டனின் உடலை சுமந்து கொண்டு ஊர் மக்கள் மழையூர் துணை மின் நிலையத்திற்கு சென்றனர். பின்னர் மழையூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணிநேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அறிந்து அந்த இடத்திற்கு வந்த மழையூர் காவல்துறையினர் மற்றும் மழையூர் உதவி மின் ஆய்வாளர் ஊர் மக்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்ற மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் மணிகண்டனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.
இவ்வாறு தங்களது அலட்சியப்போக்கால் ஒரு சிறுவனின் உயிரை பலி வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் தமிழக அரசு, மகனை இழந்து வாடும் கூலித் தொழிலாளிக்கு உதவித்தொகை அளித்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தனது ஒரே தம்பியை இழந்து தவிக்கும் சகோதரி அனுசியா பேசும் வீடியோ பதிவு இங்கே:
இதில் இன்னும் சோகமான விஷயம் என்னவென்றால் கூலித்தொழிலாளி அய்யாக்கண்ணு ஏற்கனவே தனது மூத்த மகனை இதேபோன்று வேறொரு சம்பவத்தில் பறிகொடுத்துள்ளார் என்பதுதான். தாங்கள் பெற்ற இரண்டு மகன்களையும் இழந்து வாடும் பெற்றோர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது என்று ஊர் மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.