சென்னையில் மீண்டும் ஒரு கட்டிட விபத்து: தனியார் மருத்துவமனையின் சாரம் இடிந்து விழுந்தது!



building-accident-in-chennai

சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் நடந்த கட்டிட பணியின்பொழுது தூண் மற்றும் சாரம் சரிந்து கீழே இருந்த கொட்டகை மீது விழுந்துள்ளது.  

chennai

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு 8 ஆம்புலன்சுகள் மற்றும் 3 தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த விபத்தில் 27 பேர் மீட்கப்பட்டாலும் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். 

கந்தன் சாவடி பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றின் கட்டடப் பணி நடந்து வருகிறது. இதில் பெரும்பாலானோர் ஒரிசா உள்ளிட்ட வடமாநில மக்கள்தான் பணியாற்றி வருகின்றனர். இன்று மாலையும் வழக்கம்போல் தொழிலாளர்கள் கட்டிடத்தின் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் கட்டிடத்தின் சாரம் திடீரென சரிந்து விழ தொடங்கியது.

சிறிது நேரத்திற்கெல்லாம் கட்டிடம் மளமளவென இடிந்து விழுந்தது. கூடவே கான்கிரீட் போடும் இரும்புக்கம்பிகளும் விழுந்தன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த இடிபாட்டுக்குள் சிக்கி கொண்டனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர். உடனடியாக மீட்பு பணிகளும் நடைபெற துவங்கியதில், 27 பேர் மீட்கப்பட்டனர். மீதம் 18-க்கும் மேற்பட்டோர் இன்னும் இடிபாடுகளுக்குள்ளேயே சிக்கி இருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

மீட்கப்பட்டவர்களில் 10 பேர் பெருங்குடி தனியார் மருத்துவமனையிலும், 10 பேர் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், 5 பேர் இசிஆர் அவசர சிகிச்சை பிரிவிலும், 2 பேர் ராயப்பேட்டை மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களில் 3 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

chennai

கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை முகலிவாக்கத்தில் இதே போன்ற கட்டிட விபத்து நடந்ததில் 61 பேர் உயிரிழந்தது நினைவிற்கு வருகிறது.