கவுன்சிலிங் கொடுப்பதாக 12ம் வகுப்பு மாணவிகள் பலாத்காரம்... சென்னையில் தனியார்பள்ளி தாளாளர் தலைமறைவு..!
பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக தாளாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள ஆவடி திருநின்றவூர், இ.பி காலனியில் ஏஞ்சல் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ - மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். பள்ளியின் தாளாளராக வினோத் (வயது 34) என்பவர் பணியாற்றி வருகிறார்.
தாளாளர் வினோத் மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பான தகவல் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததும் பலனில்லை. இதனால் நேற்று காலையில் 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் தங்களின் பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் திரண்டனர். திடீர் சாலை மறியலும் நடந்தது.
மாணவ - மாணவியர்களின் போராட்டத்திற்கான காரணத்தை அறிந்துகொண்ட பொதுமக்கள், பெற்றோர்களுடன் தாங்களும் இணைந்துகொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற பட்டாபிராம் காவல் உதவி ஆணையர், திருநின்றவூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், இதுகுறித்து பெற்றோர், மாணவ-மாணவியர்களிடம் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கல்வி ஆளுனர், ஆவடி தாசில்தார் ஆகியோரும் வருகை தந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் திருநின்றவூர் காவல் துறையினர் வினோத்தின் மீது போக்ஸோ உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ள நிலையில், பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது என பெற்றோர்களுக்கு வாட்ஸப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.