இவர்களுக்கு சாதிமறுப்பு திருமண சான்றிதழ் கிடையாது - சென்னை நீதிமன்றம் அதிரடி.!



Chennai High Court Dismiss Appeal About Salem Dalit Christian Want Inter Caste Marriage Certificate

கிருத்துவ ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்தவர், அருந்ததியர் வகுப்பை சார்ந்த பெண்மணியை திருமணம் செய்து, சாதிமறுப்பு திருமண சான்றிதழ் கேட்டு தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மனுதாரருக்கு சாதிமறுப்பு திருமண சான்றிதழ் கொடுக்க முடியாதெனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்,

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியை சார்ந்தவர் பால்ராஜ். இவர் கிருத்துவ ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்தவர். அமுதா என்ற பெண்மணி அருந்ததியர் வகுப்பை சார்ந்தவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், பால்ராஜ் கிருத்துவ ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்தவர் என்பதால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் பெற்றிருந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் தனக்கு சாதி மறுப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என விண்ணப்பித்து இருந்தார். 

இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மேட்டூர் வட்டாட்சியர், மதம் மாறி திருமணம் செய்தவருக்கு சாதிமறுப்பு திருமண சான்றிதழ் வழங்க முடியாது என கூறி, அவரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து பால்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவே, இன்று இம்மனு தொடர்பான விசாரணை நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. 

chennai

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் முன்னிலையில் அரசுத்தரப்பில் அளித்த பதிலாவது, "கடந்த 1997 அரசாணை சட்டத்தின்படி, மதம்மாறிய நபருக்கு சாதிமறுப்பு திருமண சான்றிதழ் வழங்க முடியாது. பால்ராஜ் அவர்களின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ய வேண்டும். வட்டாட்சியர் முடிவு சரியானதே" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத்தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, "சாதிமறுப்பு திருமண சான்றிதழ் மனுதாரருக்கு வழங்க முடியாது. மதம் மாறுவதால் ஒரு நபரின் சாதி மாறுவது இல்லை. ஒரே சாதியை அல்லது வகுப்பை சார்ந்த கணவன் - மனைவிக்கு சாதிமறுப்பு திருமண சான்றிதழ் பெரும் தகுதி இல்லை. மதம் மாறியவருக்கு சாதிமறுப்பு திருமண சான்றிதழ் கொடுத்தால், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கான சலுகை தவறாக உபயோகப்படுத்தப்படலாம்" என்று தெரிவித்தனர்.