35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
மின்கசிவை சரி செய்யாததால் பெருந்துயரம்.. குழந்தையில்லா வயோதிக தம்பதி மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி.. சென்னையில் நெஞ்சை உலுக்கும் சோகம்.!
இரும்பு கதவின் மீது மின்சாரம் பாய்ந்ததை பலமுறை கூறியும் சரிசெய்யாமல் விட்ட நிலையில், இரண்டு உயிர் பரிதாபமாக பலியாகியுள்ள துயரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள கோடம்பாக்கம், இரத்தினம்மாள் தெரு கிஷன் பவுண்டேசன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மூர்த்தி (வயது 78). இவர் ஓய்வுபெற்ற வருமானவரித்துறை அதிகாரி ஆவார். மனைவி பானுமதி (வயது 76). இவர் ஓய்வுபெற்ற தடயவியல் துறை ஐ.ஜி ஆவார். இவர்கள் வசித்து வரும் குடியிருப்பில் 6 வீடுகள் இருக்கின்றன. இவர்கள் கீழ் தளத்தில் வசிக்கிறார்கள். பிற வீடுகள் தம்பதியின் உறவினர்களுக்கு சொந்தமானவை. உறவினர்கள் வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால் பிற வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்பதால் இருவரும் தனியே தங்களின் வீட்டில் வசித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் இவர்கள் வீட்டின் வெளிப்புற கதவை பூட்டிவிட்டு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு 10.30 மணியளவில் மூர்த்தி மற்றும் பானுமதி வெளிப்புற கேட்டை பூட்டுவதற்கு சென்றுள்ளனர். அப்போது, வாசலில் உள்ள மின்விளக்குகளுக்கு செல்லும் மின்சார சாதனம் பழுதாகி, கேட்டில் மின்சாரம் பாய்ந்து இருக்கிறது.
இதனை அறியாத தம்பதி கேட்டை பூட்ட கைவைத்த போது அவ்வர்களின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பானுமதி மின்சாரத்தால் இழுக்கப்பட்டு கேட்டிலேயே தொங்கிவிட, மனைவியை அவசர கதியில் காப்பாற்ற சென்ற மூர்த்தியின் மீதும் மின்சாரம் பாய்ந்து இருக்கிறது. இருவரும் அலறியவாறு மின்தாக்குதலுக்கு உள்ளாகவே, பக்கத்து வீட்டில் பணியில் இருந்த காவலாளி இருவரையும் கண்டு அலறி இருக்கிறார்.
இதனையடுத்து, எதிர்வீட்டில் இருந்தவரும் என்ன என்பது தெரியாமல் கூச்சல் சத்தம் கேட்டு வந்து, மின்தாக்குதலுக்கு உள்ளாகி நற்செயலாக அவர் தப்பித்துக்கொண்டார். பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கும் & மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மின்னிணைப்பை துண்டித்து இருவரையும் உயிரிழந்தபின் சடலமாக மீட்டனர். இருவரின் உடலையும் கைப்பற்றிய அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக அசோக் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், "கடந்த சில மாதங்களாகவே குடியிருப்பில் மின்சார பிரச்சனை இருந்து வந்துள்ளது. பல நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு லேசான மின் அதிர்வுடன் ஒருசிலர் தப்பி இருக்கின்றனர். இது குறித்து புகார் அளித்தும் குடியிருப்பு உரிமையாளர் அதனை சரி செய்ய முன்வரவில்லை. இறுதியில் 2 பேரை அது காவு வாங்கிவிட்டது" என்பது அம்பலமானது.