14 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்திக்குறிப்பில், தமிழத்தின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும் இன்று திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவில் மதுரையில் தலா 10 சென்டிமீட்டர், ஈரோட்டில் தலா 9 சென்டிமீட்டர், விருதுநகர் மற்றும் தேனியில் தலா 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.