கொலை கேசில் ஜாமின்.. வந்ததும் வழிப்பறி.. கை-கால்களை உடைத்துக்கொண்டு புல்லிங்கோ ரௌடிஸ்.!



Chennai Pallavaram Robbery Attempt 3 Arrested by Police

சென்னையில் உள்ள பல்லாவரம் பொழிச்சலூரில், சங்கர் நகர் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த 4 பேர், இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்றுள்ளனர். காவல் அதிகாரிகள் இருக்கும் இடத்தில் இருந்து சிறுதொலைவில், லாரியை இடைமறித்து ஓட்டுனரிடம் வழிப்பறி செய்துள்ளனர். ஓட்டுநர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே, அப்படியென்றால் லாரியை தங்களிடம் ஒப்படைத்துவிட்டு செல் என்றும் கூறியுள்ளனர்.

இதனைப்பார்த்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த காவல் துறையினருக்கு தகவல் பரிமாறப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயற்சித்துள்ளனர். 4 பேர் கும்பலில் 3 பேர் அங்கிருந்து வாகனத்தில் தப்பி செல்ல, ஒருவன் தப்பி ஓட முயன்ற போது 20 அடி பள்ளத்தில் விழுந்து கை, கால்களை உடைத்துக்கொண்டார். 

chennai

அவரை மீட்ட அதிகாரிகள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். சிகிச்சைக்கு பின்னர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், கால்களை உடைத்துக்கொண்ட இளைஞர் பம்மல், திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் சத்யா (வயது 23) என்பது தெரியவந்தது. இவனின் மீது காவல் நிலையத்தில் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சமீபத்தில் குன்றத்தூரில் நடந்த கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற சத்யா, 5 நாட்களுக்கு முன்னதாக ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவனுடன் வந்த 3 பேர் கூடுவாஞ்சேரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பதும் உறுதியானது. 

இதனையடுத்து, கூடுவாஞ்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற காவல் துறையினர், எஞ்சியுள்ள 3 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்போது, இரண்டாவது மாடியில் இருந்து குதித்து ஒருவன் தனது கைகளை முறித்துக்கொண்டான். அங்கு நவீன் (வயது 20), கருணாகரன் (வயது 20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் மீதும் காவல் நிலையங்களில் நிலுவை வழக்குகள் உள்ளன. இதனையடுத்து, மூவரின் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, கத்தி, இருசக்கர வாகனம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனமும் திருடப்பட்டது விசாரணையில் அம்பலமானது.