வடமாநில இளைஞர் கொலை வழக்கு.. தலைமறைவாக இருந்த 4 பேரை தட்டிதூக்கிய தமிழக காவல்துறை.!



Chennai Perumbakkam Assam Youngster 2017 Murder Case 4 Youngsters Arrested

கொடுக்கல் - வாங்கல் பிரச்சனையில் இளைஞரை கொலை செய்த வடமாநில வாலிபர்கள், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் உள்ள வேளச்சேரி பெரும்பாக்கம், காந்தி நகரில் கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக தனியார் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகளில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். 

இவர்களில், பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறில் யூனிஸ் என்ற 22 வயது இளைஞரை, சிவம் நாயக் (வயது 21), பிஜாய் நாயக் (வயது 22), சஞ்சய் பாலா (வயது 19), ஜெயராஜ் முண்டே (வயது 25) ஆகியோர் அடித்து கொலை செய்து தப்பி சென்றனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை காவல் துறையினர், 4 வடமாநில இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

chennai

இவர்கள் நால்வரும் கடந்த சில மாதத்திற்கு முன்னதாக ஜாமினில் வெளியே வந்த நிலயில், நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளனர். இந்த நிலையில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவியின் உத்தரவின் பேரில், பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தனிப்படை காவல் துறையினர் அசாம் மாநிலத்திற்கு சென்றனர். 

அங்கு சொந்த கிராமத்தில் இருந்த சிவம் நாயக், விஜய் நாயக், சஞ்சய் பாலா, ஜெயராஜ் முண்டே ஆகியோரை அசாம் மாநில காவல் துறையினரின் உதவியுடன் கைது செய்த அதிகாரிகள், சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.