கஜா: நாகைக்கு ரயிலில் சென்று நிவாரண உதவிகளை வழங்கிய முதல்வர்



Cm visits nagai District by train

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ரயில் மூலம் செய்து மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.

கஜா புயல் வீசிய நான்கு நாட்களுக்குப் பிறகு முதன்முதலாக புயல் சேதங்களை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை பார்வையிட்டு வந்தார். முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சாலை வழியே செல்லாமல் ஹெலிகாப்டர் மூலம் சென்றதை பலரும் விமர்சனம் செய்தனர்.

அப்பகுதி மக்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டதற்கு முதல்வரை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆனால், விமர்சனம்குறித்து பதிலளித்த முதல்வரோ, ``சாலை வழியாகச் சென்றால் அதை எப்படி முழுமையாகப் பார்வையிட முடியும். ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து, ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு மரங்கள் சாய்ந்தன, சேதங்கள் எவ்வளவு என்பதை முழுவதுமாகப் பார்வையிட்டோம்" என விளக்கமளித்தார். 

Tncm

அதனைத் தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினத்தை முதல்வர் ரயில் மூலம் செய்து பார்வையிடும் திட்டம் வகுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு முதல்வர் சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டு இன்று காலை நாகை சென்றடைந்தார்.

நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களை இன்று காலை, முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முதலில் நாகையில் உள்ள பஞ்சாய்த்து அலுவலகத்தில் வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும் நிவாரணப் பணியின் போது உயரிழந்த மின்ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணிநியமன ஆணையும் வழங்கினார்.  

Tncm

அதன் பிறகு அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு சாலை வழியாக செல்லும் முதல்வர் 2 மணிக்கு மேல் திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகள் வழங்க உள்ளார். முதல்வர் பழனிசாமியுடன் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.