கணவன் - மனைவியாக தொடர் திருட்டு.. காக்கியை கண்டதும் கட்டியவளை கைவிட்டு பறந்த திருட்டுப்பய..!



Coimbatore Sulur Husband Wife Couple Thief

சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தம்பதியில் பெண்மணி கைது செய்யப்பட்டார். கணவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வந்தன. இந்த விஷயம் தொடர்பாக சூலூர் காவல் துறையினருக்கு புகார்கள் குவிந்திருந்த நிலையில், சூலூர் பாப்பம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 60), மகளை அமெரிக்காவிற்கு வழியனுப்ப சென்னைக்கு குடும்பத்தோடு சென்றிருந்தார். 

அதனைத்தொடர்ந்து, மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தன. வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 கிராம் நகைகள் திருடப்பட்டது அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

Coimbatore

மேலும், சூலூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த சமயத்தில், வீட்டின் முன்பு நள்ளிரவில் கணவன் - மனைவி போல இருந்தவர்கள், வீட்டின் கதவை திறக்க போராடிக்கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்த அதிகாரிகள் விசாரணைக்கு முற்பட்டபோது ஆண் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். சுதாரித்த அதிகாரிகள் பெண்ணை கைது செய்தனர். 

காவல் துறையினரின் விசாரணையில், பெண் ஒண்டிபுதூர் காமாட்சிபுரத்தை சார்ந்த திவ்யா (வயது 29) என்பது உறுதியானது. தப்பிச்சென்றவர் திவ்யாவின் கணவர் பிரகாஷ் (வயது 34). இருவரும் நள்ளிரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் கணவன் - மனைவியாக சென்று விளக்கு எரியாத வீட்டை பார்த்து கொள்ளையடித்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதில், திவ்யா கைது செய்யப்பட்ட நிலையில், பிரகாஷ் தேடப்பட்டு வருகிறார்.