தொடரும் ஆன்லைன் ரம்மி மரணங்கள்... லட்சக்கணக்கில் பணத்தை இழந்து.. பலியான இளைஞர்...!



Continued online rummy deaths..c...victim youth...

சேலம் மாவட்டம் முள்ளாகாடு பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (26). இவரது தாய் சிறு வயதிலேயே இறந்துவிட்டதால், தந்தை மறுமணம் செய்து கொண்டார். குணசீலன் தனது தம்பிகளான பசுபதி, கமல் ஆகியோருடன் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். 

குணசீலன் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியதால், குடும்ப சூழல் காரணமாக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் கூலிவேலைக்கு சென்று வந்தார். இவரது இளைய சகோதரர் பசுபதி மதுரையில் தனியார் ஹோட்டலில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையானார் குணசீலன். சம்பளப் பணத்தை சிறிது சிறிதாக இழந்த நிலையில் நிலையில், நண்பர்களிடம் கடன் வாங்கி பணத்தை இழந்துள்ளார். குணசீலன் இதுபோல் சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்து தவித்துள்ளார்.

இது தம்பி பசுபதிக்கு தெரியவந்ததால் தனது சேமிப்பு முழுவதையும் கொடுத்து கடனை அடைத்த பசுபதி, அதன்பின் குணசீலனுக்கு அறிவுரை கூறி, தினசரி 600 ரூபாய் சம்பளத்துக்கு மதுரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சர்வர் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அந்த சூழலிலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை குணசீலன் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். அவர் வாங்கிய சம்பளம் மட்டுமல்லாது, நண்பர்கள் சிலரிடமும் கடன் பெற்று விளையாடியுள்ளார். குணசீலன் தொடர்ந்து மேலும் பணத்தை இழந்த நிலையில், குணசீலன் கடந்த சில வாரங்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல வேலைக்கு வந்த குணசீலனை திடீரென மதியம் மூன்று மணிக்கு மேல் காணவில்லை. எனவே பசுபதி சாத்தமங்கலத்தில் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த போது, கொக்கியில் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

பசுபதி அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குணசீலனனின் அலைபேசியை கைப்பற்றி ஆய்வு செய்தனர். காவல்துறையினர் விசாரணையில் மொத்தமாக சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் குணசீலன் இழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது