பள்ளி மாணவிக்கு தாலிகட்டிய வீடியோ வெளியிட்டவர் கைது ஏன்?; கடலூர் மாவட்ட காவல்துறை விளக்கம்..!



Cuddalore Chidambaram School girl Marriage

 

நடுரோட்டில் நடந்த காதல் திருமணத்தை வீடியோ எடுத்து வெளியிட்டவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கான விளக்கத்தை கடலூர் மாவட்ட காவல்துறை தந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவிக்கு பாலிடெக்னீக் கல்லூரி மாணவன் மஞ்சள் தாலி கட்டினான். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோவை கண்ட காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனர். 

அதனைத்தொடர்ந்து, பள்ளி மாணவன் - மாணவியை காவல் நிலையம் அழைத்து சென்ற அதிகாரிகள், மாணவிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும், மாணவனை முதலில் எச்சரித்து அனுப்பிய அதிகாரிகள், ஆலோசனை மேற்கொண்டு மாணவனையும் கைது செய்தனர்.

Cuddalore

இவ்விவகாரத்தில் மாணவிக்கு - மாணவன் தாலிகட்டுவதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட எழுத்தாளர் பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விளக்கம் அளிக்கையில், சிறுமியின் புகைப்படத்தை சமூகத்தில் அடையாளப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டது. 

மேலும், சிறுமியின் அடையாளத்தை எதற்காக அம்பலப்படுத்தினீர்கள்? என அவரின் பெற்றோர் கேட்க சென்றபோது, அவர் சிறுமியின் பெற்றோரை அவதூறாக பேசியுள்ளார். அவர்கள் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.