தமிழகத்தில் மீண்டும் முழுஊரடங்கா? தீயாய் பரவும் தகவல்! தமிழக முதல்வர் அதிரடி பதில்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகளவில் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாகிகொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அடுத்தடுத்ததாக தொடர்ந்து தற்போது 5வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. மேலும் நாட்டிலேயே கொரோனா தொற்று அதிகமாக பரவும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், அடுத்ததாக தமிழகமும் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவற்றில் சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு பெருமளவில் உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் சென்னை மற்றும் பல பகுதிகளில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது. தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்று பரவிவரும் தகவல் வதந்தி. இதுகுறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை என கூறியுள்ளார். மேலும் இவ்வாறு வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் கூறியுள்ளார்.