பார்த்தால் பப்பர மிட்டாய் மாதிரி இருக்கும்., சாப்பிட்டாலே அவ்ளோதான்.. உடனே தடுக்க வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்..!



durai-murugan-talk-about-bothai-porul

வேலூர் மாவட்டம்,வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் ஊர்வலம் நடந்தது. வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தற்போது மாணவர்களிடையே, பொதுமக்கள் மத்தியில் ஒரு கடுமையான வியாதி பரவி இருக்கிறது. அதுதான் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது.

ஒரு காலத்தில் இவை எல்லாம் யாரோ படிக்காதவர்களிடம் தான் பரவி இருக்கும். ஆனால் இப்பொழுது சமூக விரோதிகள் கொண்டு வந்து கொடுத்து ஒரு இளம் தளிராக இருக்கக்கூடிய பிள்ளைகளையே கருக வைக்கிறார்கள். பார்த்தால் பப்பர மிட்டாய் மாதிரி இருக்கும். ஒரு பப்பர மிட்டாயை சாப்பிட்டாலே போதை ஏறும். இரண்டாவது நாள் அதைத் தேடும். மூன்றாவது நாள் முழுக்க அடிமையாகி விடுவார்கள்.

இப்படிப்பட்ட பயங்கரமான நிலை உள்ளது. போதைக்கு அடிமையானால் சுயநினைவை இழந்து விடுவோம். அதற்குப் பிறகு வாழ்க்கையில் எதையும் எதிர்க்க வேண்டும், போதைப் பொருட்களை தடுப்பவர்களை கொல்ல வேண்டும் என்று கூட அவர்களுக்கு வைராக்கியம் ஏற்பட்டுவிடும். இதைச் சமூகவிரோதிகள் ஆந்திராவிலிருந்து கடத்திக் கொண்டு வந்து அன்றைக்கு எங்கேயோ ஒரு மூலை முடுக்கில் இருளிலே விற்றுக்கொண்டு இருந்தவர்கள் இன்று பள்ளி வளாகத்திலும், கல்லூரி வளாகத்திலுமே விற்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதை எப்படியும் தடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் வருங்காலத்திலே வளர வேண்டிய இந்த குழந்தைகள் அரும்பாக இருக்கும் பொழுதே கருகிவிடுவார்கள். போதை பொருளை ஒரு ஆளால் தடுக்க முடியாது. இது ஆந்திராவிலிருந்து ஆயிரம் வழிகளில் வேலூர் மாவட்டம் வழியாகவும் தமிழகத்திற்குள் வருகிறது. கிருஷ்ணகிரிலிருந்து -கும்மிடிப்பூண்டி வரையில் பல்வேறு வழிகளில் ஆந்திராவில் இருந்து வருகிறது. இதனை தடுக்க அனைவரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.