தேனோசின் பச்சை நிற அதிசிய கல் என கம்பிக்கட்டும் கதை.. 8 பேர் கும்பல் பலே உருட்டு..! மக்களே உஷார்.!!



Erode Fake Green Stone Forgery Gang Arrested by Police

அதிசிய பச்சை கல் என பச்சைப்பொய் பேசி ரூ.10 இலட்சம் மோசடி செய்ய முயன்ற 8 பேர் கும்பல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இப்படியும் ஏமாற்றுகிறார்களா? என்ற அதிரவைக்கும் தகவலும் அம்பலமாகியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்திலுள்ள டி.என். பாளையம், நஞ்சை புளியம்பட்டி நேரு வீதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 40). இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இதே கிராமத்தில் உள்ள ரங்கம்மாள் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 53). அந்தியூரில் உள்ள நாகலூரை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 70). இவர்கள் இருவரும் சேர்ந்து ராஜேந்திரனை சந்தித்து, தங்களிடம் வானில் இருந்து விழுந்த அதிசிய பச்சை நிற கல் இருக்கிறது. இதனை வைத்திருப்பவர்களை கத்தியால் வெட்டினாலும் இரத்தம் வராது, காயம் ஏற்படாது. பணம் வரும் என ஆசை வார்த்தையை கூறியுள்ளனர்.

இவர்களின் பேச்சில் மயங்கிப்போன ராஜேந்திரனும் அதிசிய கல்லை பார்க்க வேண்டும் என கூறவே, ராஜேந்திரன் மற்றும் அவரின் நண்பர் செந்தில்குமார், சின்ராஜ், ஆனந்தகுமார் ஆகியோர் டி.என். பாளையத்திற்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து தனியார் பள்ளிக்கூடம் அருகே சென்ற நிலையில், மரத்தடியில் இருந்த கும்பலிடம் ராஜேந்திரன் பச்சை நிற கல் தொடர்பாக பேசியுள்ளார். அவர்கள் ரூ.10 இலட்சம் விலை என்று கூறி, அதனை டப்பாவில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 

erode

இதனை மோசடியாக இருக்கலாம் என நினைத்து ராஜேந்திரன் சுதாரித்து நாளை வருவதாக கூறிய நிலையில், அதிசிய கல்லை வாங்காத பட்சத்தில் நாளை உன் தலை உருண்டுவிடும் என கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ராஜேந்திரன்  பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். 

அதனைத்தொடர்ந்து, ஆந்திராவை சேர்ந்த நாகூர் ஐயா (வயது 50), பவானியை சேர்ந்த சிவன் மலை (வயது 51), சங்ககிரியை சேர்ந்த சாமிமலை, சடையாம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது 45), காட்டூரை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (வயது 57), சின்ராஜ் (வயது 54) உட்பட 8 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மோசடி கும்பல் தொடர்பான விவகாரத்தில் மக்கள் சுதாரிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.