தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.! வீரப்பெண் வீரலட்சுமிக்கு குவிந்துவரும் பாராட்டுக்கள்!



first ambulabnce women driver

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்தநிலையில் உயிர்காக்கும் 108 அவசரகால ஊர்தி சேவை தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள கூடுதல் பளுவையும் சமாளிக்க உயிர்காக்கும் 108 அவசரகால ஊர்தி சேவைக்காக மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 90 அவசரகால ஊர்திகள்,10 இரத்ததான ஊர்திகள் உள்ளிட்ட 118 அவசரகால ஊர்திகளின் சேவையை முதல்வர் பழனிசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதில், 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றுக்கு பெண் ஓட்டுநர் வீரலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்ள்ளார். இதன் மூலம் அரசு ஆம்புலன்ஸ் வாகனமான 108 ஆம்புலன்ஸ் சேவையின் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் வீரலட்சுமி. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் டிவிகே நகர் சாமி தெருவைச் சேர்ந்தவர் வீரலட்சுமி (30). இவருக்கு முத்துக்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்று இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.


தற்போது வீரலட்சுமி தனது கணவருடன் சென்னை திருவேற்காடு பகுதியில் வசித்து வருகிறார். வீரலட்சுமியின் கணவர் முத்துகுமார் சென்னையில் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது கணவருக்கு உதவியாக கால் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார். இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காரணத்தால் தொழில் பாதிக்கப்பட்டதால் சொந்த ஊரான தேனி மாவட்டம் போடிக்கு வந்துள்ளார். தற்போது சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தின் ஆம்புலன்ஸ் சேவையில், முதல் பெண் ஓட்டுநராக நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி.வீரலட்சுமி அவர்களுக்கு எனது நெஞ்சம்நிறைந்த வாழ்த்துக்கள்! சமூக அக்கறையோடு உயிர்காக்கும் சேவையில் இணைந்திருக்கும் திருமதி.வீரலட்சுமி அவர்களைப் போல் மேலும் பல பெண்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.