நாளை முதல் அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்!,, தீர்வு காணுமா தமிழக அரசு..!



Government bus transport employees are on strike from tomorrow

தமிழ்நாடு அரசு, அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்தம் குறித்த 6 வது கட்ட பேச்சுவார்த்தை, சென்னையை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நாளை நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தைகளில்  உடன்பாடு எட்டப்படாததால் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் தயாராவதாக கூறப்படுகிறது.

முன்னதாக, ஊதிய ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நாளை போக்குவத்துகழக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் (புதன்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஒரு தொழிற்சங்கத்திற்கு ஒருவர் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிடில் நாளையோ அல்லது அதற்கு மறுநாளோ காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயாநந்தம் கூறியுள்ளார்.