காருடன் நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்து: ஐயப்ப பக்தர் பரிதாப பலி; 3 பேர் காயம்..!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் தாஸ் (45). இவர் பல்லடத்தில் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக தாஸ் மாலை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முந்தினம் இரவு 1 மணியளவில், தாஸ் காங்கயத்தில் இருந்து பல்லடம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். பொங்கலூர் சாலையில் தொலைதொடர்பு அலுவலகத்தை கடக்கும் போது, கோவையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசுப்பேருந்து எதிர்பாராதவிதமாக காருடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்புறம் முழுவதுமாக சேதமடைந்தது. இதன் காரணமாக காரை ஓட்டி வந்த தாஸ் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் அரசுப்பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் 1 பயணி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் காவல்துறையினர் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறையினர் காருக்குள் சிக்கி உயிரிழந்த தாஸை இடிபாடுகளில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த அவினாசிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.