ரத்து செய்யப்பட்ட கல்லூரி செமஸ்டர் தேர்வுகளுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படுகிறது.?
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக பள்ளி கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டன. இதனையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கவில்லை. மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 23-ந்தேதி அறிவித்தார்.
அந்த அறிவிப்பில் கலை , அறிவியல் இளநிலை படிப்பில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும், முதுநிலை படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுகிறது. தொழிற்கல்வி மாணவர்களுக்கான பட்டய தேர்வும் ரத்து செய்யப்படுகிறது பொறியியல் படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும், எம்.இ மாணவர்களுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். படிப்பை முடிக்க இறுதி தேர்வை எழுதுபவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ரத்து செய்யப்படும் தேர்வுகளுக்கு சில வழிமுறைகளை பின்பற்றி மதிப்பெண் வழங்கப்பட இருக்கிறது. அதாவது கடந்த செமஸ்டரில் மாணவர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தின் அகமதிப்பீடு அல்லது தொடர்ச்சியான அக மதிப்பிட்டில் இருந்து 70 சதவீதமும் மதிப்பெண்களை என மொத்தம் 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு முதன்மை பாடங்களுக்கும், மொழிப்பாடங்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
துணைப்பாடங்கள் மற்றும் விருப்பப்பாடங்களுக்கு 100 சதவீதம் அகமதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும். செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். மாணவர்கள் இதற்கு முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் அத்தேர்வுகளை (அரியர்) பின்னர் எழுதவேண்டும்.
தொலைதூரக் கல்வியை பொறுத்தவரையில் மேற்கண்ட நடைமுறை பின்பற்றப்படும். தொலைதூரக்கல்வியில் எங்கெல்லாம் அகமதிப்பீடு இல்லையோ, அங்கே அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த மதிப்பீட்டு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்குபெற்று அவர்களின் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ளலாம்.