அடக்கொடுமையே! தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி சகோதரிகள் பலி. கதறும் குடும்பத்தினர்.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அடுத்த வலையாம்பட்டு ராஜீவ் காந்தி நகரில் வசந்தா தனது மகன் பிரகாஷ் உடன் வசித்து வந்துள்ளார். மேலும் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பழைய காலணி மாரியம்மன் கோவில் தெருவில் வசந்தாவின் சகோதரியான சாவித்திரி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வசந்தா, பிரகாஷ் மற்றும் சாவித்ரி தனது உறவினரின் துக்க நிகழ்விற்கு செல்வதற்காக ஆம்பூர் இரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பிரகாஷ் இரயிலில் பயணம் செய்ய பயணசீட்டு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது சாவித்ரி மற்றும் வசந்தா தாங்கள் பயணிக்க போகும் இரயில் 2வது நடைமெடைக்கு வரும் என்பதால் அங்கு சென்று காத்திருக்கலாம் என்று முடிவு செய்து மகனிடம் நாங்கள் முன்னாடி நடந்து செல்கிறோம் என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் முதல் நடைமேடையில் இருந்து இரண்டாவது நடைமேடைக்கு செல்ல குறுக்கே உள்ள தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் சாவித்திரி மற்றும் வசந்தா மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்த்திலே உடல் சிதறி பலியாயினர். இதனையடுத்து இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் அங்கு வந்து அவர்கள் இருவரின் சடலத்தையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில் மோதி சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.