குற்றம் சுமத்துவதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆதாரம் இருந்தால் பதில் சொல்கிறேன்: அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி..!



If there is evidence I will answer Minister Senthil Balaji action

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுப்பி வருகிறார். இந்த குற்றச்சாட்டு குறித்து சென்னையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது;-

ஒரு அரசியல் கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்து கொண்டு அமலாக்கத்துறையை எப்படி பயன்படுத்துகிறது என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதிலேயே தெரிகிறது. நிலக்கரி கொள்முதல் தொடர்பான அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் எதுவும் ஏற்புடையது அல்ல. மத்திய அரசு எத்தனை டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை அண்ணாமலை கூறவேண்டும்.

அதே நேரத்தில், தமிழக அரசு எத்தனை டாலருக்கு நிலக்கரியை இறக்குமதி செய்கிறது என்பதையும் அவர் கூற வேண்டும். மேலும், இரண்டுக்கும் ஏன் இந்த வித்தியாசம் என்பதையும் அவர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பா.ஜனதா கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? என்பதையும் அவர் பொது மக்களிடம் கூறட்டும்.

அண்ணாமலை கூறுவது வெறும் குற்றச்சாட்டு, உண்மையில் அந்த குற்றச்சாட்டுகளுக்கு அவரிடம் ஆதாரம் இருந்தால் கொடுக்க வேண்டும். அப்படி ஒருவேளை அவர் ஆதாரத்தை கொடுத்தால் அதற்கு பதில் கூற தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.