கள்ளழகர் கோவில் பாதுகாப்பு அறையில் பயங்கர தீ விபத்து: வரவு - செலவு கணக்குகள் உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து நாசம்..!



In a terrible fire, documents including budgets and accounts were destroyed in the security room of the Kallaghar temple

மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள புகழ்பெற்ற கள்ளழகர் கோவில் வளாகத்தில் தெற்கு அங்காடி வீதி அர்ச்சகர் குடியிருப்பு அருகே பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளது. இந்த அறையில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் பரவிய தீ மளமளவென்று எரிந்தது. தகவலறிந்து கோவிலுக்கு விரைந்து வந்த மேலூர் தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர்.

இந்த தீவிபத்தால் அந்த அறையில் இருந்த கோயில் வரவு-செலவு ரசீதுகள், கோயில் வரலாறு தொடர்பான ஆன்மிக புத்தகங்கள், சாமி படங்கள் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து மதுரை, மேலூர் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ள நிலையில், சம்பவம் நடந்த இடத்தை பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், கோவில் துணை ஆணையர் ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம், கோவில் அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.