சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1768 பேருக்கு கொரோனா பாதிப்பு! மற்ற இடங்களில் எவ்வளவு?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு பல கட்டங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் நேற்று மட்டும் 4 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 569 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகரில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், கோடம்பாக்கத்தில்1,300 பேருக்கும், திரு.வி.க.நகர் மண்டலத்தில்1079 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 881 பேருக்கும், அண்ணாநகர் பகுதியில் 783பேருக்கும், தேனாம்பேட்டையில் 1,000 பேருக்கும், வளசரவாக்கம் பகுதியில் 650 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.