மிரட்டிய பாய்ஸ்.. மிரண்டு போன ஐடி ஊழியர்கள்.. வழிப்பறியில் தங்களது உடைமைகளை பறிகொடுத்த சம்பவம்...!



intimidated-boys-terrified-it-employees-incident-of-rob

மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் உதகையை சேர்ந்த முகமது தானிஷ். இவர் தனது நண்பர்களுடன் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள கீழக்குயில் சமணர் படுக்கை மற்றும் மலை மேல் உள்ள சிற்பங்களை காண்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி முகமது மற்றும் அவரது நண்பர்களிடம் இருந்த செல்போன் லேப்டாப் போன்ற பொருட்களை பறித்ததோடு மட்டுமல்லாமல் ஜிபே மூலமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன முகமது தனது ஜிபே நம்பரில் இருந்து அந்த மர்ம நபர்களுக்கு பணத்தை செலுத்தியுள்ளார். அந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

robbery

இதனையடுத்து முகமது மற்றும் அவரது நண்பர்கள் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜிபே எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரை காளவாசலை சேர்ந்த விமல் மற்றும் விராட்டிபத்து பகுதி சேர்ந்த பார்த்திபன் மற்றும் சம்மட்டிப்புரத்தை சேர்ந்த யோகேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்