பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.. அரசு உடனடியாக இதைக் கவனிக்கவேண்டும்.! கமல்ஹாசன்



kamal request to government

உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டும், 400 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்தநிலையில், மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இச்சான்றிதழ் அவசியம். அரசு உடனடியாக இதைக் கவனிக்கவேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.