உருவாகிறது புயல்.!! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் தகவல்..



Latest rain update news of Tamil Nadu and Chennai

வங்கக்கடலில் ஏற்படும் புதிய புயல் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பல வாரங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் எனவும், இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai rain update

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெற்று, மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும் என தெரிவித்துள்ளது.

புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே 4ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. காற்றின் திசை மாறும்போது தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், 4,5 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது".