தென்னந்தோப்பில் கேட்ட திடீர் சத்தம்.. அங்கு வேலை பார்த்தவர்களுக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி..



Leopard found in Coconut farm near Vaniyambadi

வாணியம்பாடி அருகே தோட்டத்திற்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சென்னாம்பேட்டை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தென்னை வியாபாரியான ஜெயராமன். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று மாதகடப்பா வனப் பகுதியை ஒட்டி உள்ளது. இந்நிலையில் ஜெயராமனின் தோப்பில் வேலையாட்கள் சிலர் நேற்று வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

வேலையாட்களை மல்லிகா என்பவர் மேற்பார்வை செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது தென்னந்தோப்பில் இருந்து பயங்கரமான உறுமல் சத்தம் கேட்டுள்ளது. திடீர் உறுமல் சத்தத்தை கேட்ட அங்கிருந்த தொழிலார்கள் அனைவரும் வேலையை நிறுத்திவிட்டு, என்ன சத்தம் என்று சுற்றுமுற்றும் பார்த்தபோது, காட்டுக்குள் இருந்து வெளியே வந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாய்களை துரத்திக்கொண்டு ஓடியுள்ளது.

Leopard

இதனை பார்த்த தொழிலார்கள் அனைவரும், பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து, பாதுகாப்பான இடங்களுக்கு சென்று மறைந்துகொண்டனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தெரிவித்த மக்கள், கிராம மக்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து சிறுத்தை வந்ததாக கூறப்படும் தென்னந்தோப்பு பகுதிக்கு சென்று, அங்கு சிறுத்தையின் கால்தடம் பதிவாகியுள்ளதாக என ஆய்வு செய்தனர்.

பின்னர் அந்த பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை கவனிக்க கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.