கைலாசாவில் விவசாயத்திற்கு நிலம் வேண்டும்! நித்தியானந்தாவுக்கு பொறியியல் படித்த மதுரை விவசாயி கடிதம்!



Madurai farmer wrote letter to Nithiyanandha

நித்தியானந்தா சமீபத்தில் ஒரு புதிய இறையாண்மை தேசத்தை உருவாக்குவதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார். கைலாசா நாட்டுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர் கடந்த விநாயகர் சதுர்த்தியன்று தமிழில் பொற்காசுகள், ஆங்கிலத்தில் கைலாஷியன் டாலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் பெயர் வைத்து சமூகவலைதளத்தில் தங்க நாணயத்தை நித்யானந்தா அறிமுகப்படுத்தினார். 

இதனையடுத்து சமீபத்தில் தொழிலதிபர் ஒருவர்   நித்யானந்தாவுக்கே கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது  பிரபலமான மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டலின் உரிமையாளரும், மதுரை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான குமார்,
கைலாச நாட்டில் தனது டெம்பிள் சிட்டி ஹோட்டலின் கிளையை நிறுவ  நித்யானந்தா அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்ற நித்தியானந்தா தனது நாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போது நிச்சயம் அனுமதி தரப்படும் என்றும் மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.

Nithiyanandha

இந்தநிலையில் மதுரையை சேர்ந்த இயற்கை விவசாயி பாண்டித்துரை என்பவர் நித்யானந்தாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பரம்பரைப் பரம்பரையாக விவசாயம் செய்துவரும் குடும்பத்தில், தான் பிறந்துள்ளதாகவும், பொறியியல் படித்துவிட்டு தற்போது இயற்கை விவசாயம் செய்து வருவதாகவும், கைலாசா தேசத்தில் மதுரை மக்களுக்கு முன்னுரிமை தருவதாகக் கூறியதற்கு இணங்க அந்த தேசத்தில் இயற்கை விவசாயம் செய்ய சிறிது நிலம் தருமாறு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.