61 வயது முதியவர் செல்போன் பறிப்பில் பலி.. திருட்டு கும்பல் வெறியாட்டம்.. 4 நாட்களில் 200 புகார்கள்..!
சாலையில் நடந்து சென்ற முதியவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பலால், முதியவர் 3 நாட்கள் உயிருக்கு போராடி மரணித்த துயரம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மற்றும் அதன் புறநகர் இரயில் சேவை நிலையங்களில் பல்வேறு செல்போன் பறிப்பு சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகளவில் நடைபெற்று வருகின்றன. கடந்த 4 நாட்களுக்குள் 200 க்கும் மேற்பட்ட புகார்கள் இதுதொடர்பாக குவிந்துள்ளன. மேலும், அம்மாநில அரசு பெண் பணியாளர் செல்போன் பறிப்பு கும்பலால் இரயில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி மும்பையில் உள்ள மலாட் - மார்வி சாலையில் சென்றுகொண்டு இருந்த 61 வயது முதியவர் முகேஷ் பதியா என்பவரிடம் செல்போன் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால் காயமடைந்த முதியவரை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சி.சி.டி.வி. கேமிரா ஆதாரத்துடன் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
அப்போது, இக்குற்றத்தில் ஈடுபட்ட ஷாருக் அன்ஸாரி (வயது 26) கைது செய்யப்பட்ட நிலையில், அவனிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் பிற 2 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.