அபராதம் விதித்த‌ போக்குவரத்து காவல்துறையினர்... ஆத்திரத்தில் 15 கார் கண்ணாடிகளை உடைத்த மலேசியா வாலிபர்..!!



Malaysian teenager breaks 15 car windows in anger at traffic police fined..!!

சென்னையில் மலேசியா வாலிபர் மற்றும் ஒருவர் மது போதையில் 15 கார் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். அவர்கள் மீது 3 தனித்தனி வழக்குகள் பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். 

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலை, தியாகராயர் ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 கார்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் இரண்டு பேர் அடித்து உடைத்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும், மாம்பலம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவானது. 

இதையடுத்து காவல்துறையினர் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், ஒருவர் தூத்துக்குடியை சேர்ந்த ராகுல் (22), மற்றொருவர் மலேசியாவை சேர்ந்த தமீம் ராஜ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ராகுல் சென்னை தி.நகர் பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருவருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் தலைமறைவானவர். மலேசியா நாட்டை சேர்ந்த தமீம் ராஜ் அவரது உறவினர் வீட்டு கல்யாணத்திற்காக கடந்த வெள்ளிக்கிழமை அவரது தாய் மற்றும் சகோதரியுடன் சென்னை வந்து, தியாகராய நகரில் இருக்கும் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருப்பது தெரிந்தது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று தமீம் ராஜ் மது போதையில் லாட்ஜின் அருகே இருந்த பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி புகைத்து கொண்டிருந்த போது அதே பெட்டிக்கடையில் ராகுலும் சிகரெட் வாங்கி புகைத்துள்ளார். அப்பொழுது இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டனர். தமீம் ராஜ்  மலேசியாவில் இருந்து வந்துள்ளதாகவும், சென்னையை சுற்றி பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதை கேட்ட ராகுல், நான் உங்களுக்கு சுற்றி காட்டுகிறேன் என்று தனது பைக்கில் தமீம் ராஜை ஏற்றி கொண்டு இருவரும் சென்றுள்ளனர். ஜெமினி மேம்பாலம் வழியாக போகும் போது, தேனாம்பேட்டை போக்குவரத்து  இன்ஸ்பெக்டர் செல்வம் வாகன சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தமீம் ராஜ் மற்றும் ராகுல் பைக்கை வழிமறித்து விசாரணை நடத்தியதில், இருவரும் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து இன்ஸ்பெக்டர் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்கள் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல் மற்றும் தமீம் ராஜ்  சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 கார்களின் கண்ணாடிகளை கற்களால் அடித்து உடைத்துள்ளனர். இதைதொடர்ந்து ராகுல் மற்றும் மலேசியா வாலிபர் தமீம் ராஜ் இருவரையும் பாண்டிபஜார் காவல்துறையினர் இரண்டு வழக்குகளிலும், மாம்பலம் காவல்துறையினர் ஒரு வழக்கிலும் தனித்தனியாக கைது செய்து, தமீம் ராஜ் பாஸ்போர்ட் மற்றும் விசாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.