மின்னல் தாக்குதலில் பரிதாபம்.. மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் மரணம்... சேலத்தில் கண்ணீர் சோகம்.!



minnal-attacked-two-members-in-salem

மின்னல் தாக்கியதில் மின்வாரிய ஊழியர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வாணபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் விஜி  (வயது 31). இவருக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களே ஆகிறது. அத்துடன் பைத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனிவேல். 35 வயதான இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவர்கள் இருவரும் தா.பேட்டை தெற்கு மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தா.பேட்டை அருகாமையில் வாளசிராமணி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவரது தோட்ட கிணற்றிற்கு இலவச மின் இணைப்பு கொடுப்பதற்காக விஜி, பழனிவேல் உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளனர். பணி முடிந்து திரும்புகையில், பழனிவேல் மற்றும் விஜி இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், மற்ற நால்வரும் வேறு மோட்டார் சைக்கிளில் தனித்தனியாக சென்று கொண்டிருந்தனர்.

Salem

அப்போது இடி, மின்னலுடன் லேசாக மழை பெய்து கொண்டிருந்த நிலையில், உயர் மின் கம்பத்தை கடந்து சென்ற பழனிவேல், விஜய் ஆகியோர் இருவர் மீதும் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியுள்ளது. இதனால் இருவரும் பலத்த காயமடைந்து கீழே விழுந்துள்ளனர. இதனைக் கண்ட சக பணியாளர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் மருத்துவர்கள்  பரிசோதித்ததில் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின் இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த தா.பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மின்னல் தாக்கியதில் மின்வாரிய ஊழியர்கள் இறந்த சம்பவம் சக பணியாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.