தமிழகத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை தொற்று.! நீரிழிவு உள்ளவர்கள் உஷார்.! வெளியான புதிய வழிகாட்டு நெறிமுறை.!
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்நிலையில் தற்பொழுது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. பலர் இந்த பூஞ்சையால் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன், உயிரிழக்கவும் நேரிடுகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவில் கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 28,252 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 86 சதவீதம் அதாவது 24,370 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், 62.3 சதவீதம் பேர், அதாவது 17,601 பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது என இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கென புதிய வழிகாட்டுதல் நெறிகளை இந்திய அரசு வெளியிட்டிருந்தது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் நிச்சயமாக அவர்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள உணவை பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்று அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 938 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் நேற்று தெரிவித்தார். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
அதில், ரத்தத்தின் சர்க்கரை அளவை நீரிழிவு நோயாளிகளுக்கு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள், கொரோனா சிகிச்சை மையம், கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் உள்ள நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் இது பொருந்தும் என குறிப்படப்பட்டுள்ளது. மேலும், நீரிழிவு நோய் இல்லாத நோயாளிகளும் கூட ஸ்டெராய்ட் எடுப்பதால் ரத்தத்தில் இருக்க கூடிய சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும். எனவே அவர்களது சர்க்கரை அளவையும் கண்காணிக்க வேண்டும் என குறிப்படப்பட்டுள்ளது.
இரவு உணவுக்கு முன்பாகவும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். மூன்று வேளை உணவுக்கு முன்னதாக நிச்சயம் இன்சுலின் செலுத்த வேண்டும். சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு ஸ்டெராய்ட் உடன் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும் என குறிப்படப்பட்டுள்ளது.
சர்க்கரை அளவு 400க்கு அதிகமாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 5 யூனிட் என்ற அளவில் இன்சுலின் செலுத்த வேண்டும். கருப்பு பூஞ்சை நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஸ்டெராய்ட் எடுத்து கொள்பவர்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அதற்கான சிகிச்சையுடன் இன்சுலினை சேர்த்து அளிக்க வேண்டும் என குறிப்படப்பட்டுள்ளது.