வீட்டு வாடகை தொல்லை.. கைகுழந்தைகளுடன் சாலையோரத்தில் குடியேறிய தொழிலாளி.. பிரச்சனையை தீர்த்து வைத்த போலீசார்!
கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் கூலி தொழிலாளி ஒருவரிடம் வீட்டு உரிமையாளர் வாடகை கேட்டு தொந்தரவு செய்ததால் குழந்தைகளுடன் சாலையோரத்தில் குடியேறினார் தொழிலாளி.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினக்கூலி செய்து பிழைக்கும் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே மணவாடி பெரியார்நகர் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி நாகராஜன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார்.
ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் நாகராஜன் திணறி வருகிறார். இந்த இக்கட்டான சூழலில் வீட்டு உரிமையாளர் நகராஜனிடம் வீட்டு வாடகை மற்றும் பழைய பாக்கியை உடனே தரும்படியும் இல்லையென்றால் வீட்டை உடனே காலி செய்ய சொன்னதாகவும் தெரிகிறது.
கையில் பணம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் நாகராஜன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டையும் காலி செய்துவிட்டு கரூர்-வெள்ளியணை சாலையின் ஓரத்தில், மணவாடி அருகே அமர்ந்திருந்தார். இந்த தகவலை அறிந்து வந்த போலீசார் நகராஜனிடம் விசாரணை நடத்தினர்.
அவரின் நிலையை கேட்டறிந்த போலீசார், வீட்டு உரிமையாளரிடம் பேசியுள்ளனர். ஊரடங்கு முடிந்ததும் வீட்டு வாடகை மற்றும் பழைய பாக்கியை தந்துவிடுவதாக நாகராஜன் கூறியுள்ளார். வீட்டு உரிமையாளரும் அதற்கு இணங்கவே நாகராஜன் தனது குடும்பத்தினருடன் மீண்டும் அதே வீட்டிற்கு சென்றுள்ளார்.