கொரோனாவால் ஏற்பட்ட வறுமை! ஈரோட்டில் சிறுமிகளை பிச்சை எடுக்க அனுப்பிய பெற்றோர்!
ஈரோடு மாவட்டம் ரெயில்வே காலனி பகுதியில் இளம் சிறுமிகள் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து குழந்தைளைக் நல அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுமிகளிடம் விசாரித்தனர்.
விசாரணையில் அந்த சிறுமிகள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பெற்றோர் ஈரோடு சோலார் பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அப்பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிழைப்பதற்காக வந்துள்ளனர். இந்த கொரோனா சமயத்தில் அவர்கள் வேலையின்றி இருந்து வந்ததால் தங்களது குழந்தைகளையே பிச்சை எடுக்க அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று சோலார் பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், உரிய நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யவும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.