பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்று சோகம்.. கார் - லாரி மோதிய விபத்தில், உடல்கருகி சகோதரர்கள் பலி.!
திருச்சி அருகே உள்ள சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்ற சகோதரர்கள், விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் மாருதி நகரை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். குமாரின் சகோதரர் வெங்கடவரதன் (வயது 45). இவர்களின் சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் கிராமம் ஆகும். சகோதரர்கள் இருவரும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட முடிவு செய்து, சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல நேற்றிரவு வாடகை காரில் பயணம் செய்தனர். இவர்களுடன் குமாரின் மகளான தான்யா ஸ்ரீ என்ற 14 வயது சிறுமியும் பயணம் செய்துள்ளார்.
வாடகை காரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருவம், பெரிய மாம்பட்டை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 27) என்பவர் இயக்கியுள்ளார். இன்று காலை நேரத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்ட நிலையில், சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இவர்கள் பயணித்த கார் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை அடுத்துள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே வருகையில், பனிமூட்டம் காரணங்க முன்னால் சென்று கொண்டு இருந்த டேங்கர் லாரியின் மீது வேகமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்த நிலையில், லாரியின் அடியில் சிக்கிக்கொண்ட காரும் தீப்பற்றி இருந்துள்ளது. இதனால் காருக்குள் சிக்கிய சகோதரர்கள் இருவரும் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். ஓட்டுநர் விஸ்வநாதன் மற்றும் சிறுமி தான்யா ஸ்ரீ பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து சகோதரர்களின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.