பெரம்பலூர் கல் குவாரி விபத்து; நேரில் ஆய்வு செய்த கலெக்டர்: அதிரடி உத்தரவால் கதிகலங்கிய அ.தி.மு.க புள்ளி..!



Perambalur Stone Quarry Accident Collector personally inspected

பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி ஊராட்சியை சேர்ந்த கவுல்பாளையம் கிராமத்தில் ஏராளமான கல் குவாரிகளும் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. பெரம்பலூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள இந்த பகுதிக்கு, அருகிலுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வேலைக்காக தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.

குறிப்பாக கல் குவாரியில் பாறைகளை உடைத்து ஜல்லி கற்களாக மாற்றும் பணியில், அதிக அளவில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதற்கிடையே கவுல்பாளையத்தில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ஒருவருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினக் கூலி அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல பணிகள் தொடங்கின. இரவு நேரத்தில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்றது. இந்த பணியில் பொக்லைன் இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் உடைக்கப்பட்ட கற்களை ஏற்றிச்செல்ல லாரிகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

அப்போது வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. அருகிலேயே தொழிலாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக கீழே பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன. இடி பாடுகளில் சிலர் சிக்கியதால் அருகில் வேலை செய்த பணியாளர்கள் சிலர், அவர்களை மீட்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர்.

இருந்த போதிலும், விபத்தின் காரணமாக இடிபாடுகளில் சிக்கிய லாரி உரிமையாளர் சுப்பிரமணி , வினோத் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து சேர்ந்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தகுந்த முன்னெச்செரிக்கை இல்லாமல் இயந்திரங்களை கையாண்டதே விபத்துக்கு காரணம் என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.

மேலும், விபத்து நடந்த பகுதியில் ஆய்வு செய்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விபத்து நடந்தது குறித்து ஆலோசைனையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் விபத்து நடந்த கல்பாளையம் கல்குவாரியை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.