மாணவியரின் நலன் காக்கும் "போலீஸ் அக்கா": அதிர வைத்த காவல்துறை ஆணையர்..!
கோவை மாநகர காவல் ஆணையராக பணிபுரிந்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவியர்களின் நலன் கருதி தமிழக காவல்துறையில் முன்மாதிரி திட்டமாக "போலீஸ் அக்கா" என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.
இந்த திட்டத்தின்படி, கோவை மாநகரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், ஒரு பெண் காவலர் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார். இந்த போலீஸ் அக்கா கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுடன், மாணவியர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான, பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடுவது, பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது போன்ற அலுவல்களை கவனிப்பார்.
மேலும் கல்லூரிகளில் மாணவியரிடையே நடக்கும் மோதல்கள், போதைப்பொருட்கள் விற்பனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் சம்மந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பது, கல்லூரி மாணவியர்களுக்கு சகோதரியாக செயல்படுவதுடன் அவர்கள் கொடுக்கும் தகவல்களை ரகசியமாக பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்வார்.
இந்த முன்னோடி திட்டத்தை கோவை, கோபாலபுரத்தில் உள்ள தனது அலுவலகத்தில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், நேற்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், காவல் துணை ஆணையர் சுஹாசினி உள்ளிட்ட 37 பெண் காவலர்கள், மற்றும் கோவை மாநகரத்தில் உள்ள 60 கல்லூரிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.